P2P எழுச்சி பேரணி - நீதிமன்ற தடையை மீறியவர்கள் வயது, தகுதி வித்தியாசமின்றி கைது!

banner

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி நடத்த நீதிமன்றத்தினூடாக தடை பெறப்பட்ட இடங்களில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வயது வித்தியாசம், தகுதி தராதரமின்றி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை இளைஞர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





அவரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை வீடு செல்ல அனுமதித்துள்ளனர்.





அது தொடர்பாகக் கேட்டபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பேரணி நடத்துவதற்குப் பல இடங்களில் நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது.





அந்த இடங்களில் நீதிமன்றத் தடையை மீறி நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் வயது வித்தியாசம், தகுதி தராதரமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது நிச்சயம் சட்ட நடவடிக்கை





எடுக்கப்படும். பருத்தித்துறையில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.





அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை பெறப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.