பலிகடாவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதேபோல குறித்த தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில் வேட்டையாடப்பட்ட - பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.





ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (27.03.2021) நடைபெற்ற "சமூக நீதி" தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





 இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனவே, ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.





குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன , பிரதான சூத்திரதாரிகள் யார் , திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.  இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும், அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.





எனவே, 21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும், தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்தவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.





ஆனால் நாட்டில் எதாவது நடைபெற்றால் அதனை தனக்கு சாதகமான வகையில் அரசியல் மயப்படுத்தி , அரசியல் பிழைப்பு நடத்தும் தற்போதைய அரசு, நீதி நிவாரணத்தை வழங்குமா என்பது சந்தேகமே. எது எப்படி இருந்தாலும் பேராயர் கூறியதுபோல சர்வதேசம் சென்றாவது அம்மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேபோல 21/4 தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம்மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறு படுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.





முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே, 21/4 தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும். அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும். தமக்கான கலை, கலாசார, பண்பாட்டு, மத உரிமைகளை பின்பற்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக வேண்டும். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சமூகத்தை குறிவைப்பது குரோதத்தின் உச்சமாகும்.  " -என்றார்.