இந்தியா தனது பொறுப்பை ஐ.நாவில் சரியாக நிறைவேற்றியுள்ளது

banner

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்நியா நடுநிலையாக இருந்த போதிலும், பிரேரணை வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் பொறுப்பு மிக முக்கியத்துவமானது, என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.





அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.





அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் , நாங்கள் முழுமையாக எதிர்பார்த்த அவ்வளவும் ஒரு பிரேரணையாக வரவில்லையே தவிர அதை நோக்கிச் செல்வதற்கான நகர்வுகள் பல அத் தீர்மானத்தில் இருக்கின்றன. இந்தியாவின் செல்வாக்கும் அந்தப் பிரேரணையில் இருக்கின்றது.





அவர்கள் மிக நுட்பமாக சீனாவின் கைபிடிக்குள் இந்த அரசாங்கம் முழுமையாகச் சென்றுவிடாமல் இந்து சமுத்திரத்தினுள்ளே இந்தியாவின் வல்லாண்மைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இலங்கையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவும் மிகக் கவனமாக தமிழர்களுடைய இனப்பிரச்சினை உட்பட சொல்ல வேண்டிய கருத்துக்களை பேசி நடுநிலைமை வகித்திருக்கின்றார்கன்.





அது மிகத் தந்திரோபாயமானது. இதனை நாங்கள் நினைத்தவாறு திட்டித்தீர்ப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.





எனவே இந்தப் பிரேரணையினால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள், என்ன நலன்கள் ஏற்பட இருக்கின்றன என்பதைப் பொறுமையுடன் எதிர்பார்த்திருக்க வேண்டும். சில வேளைகளிலே அடுத்த தடவைகளில் இந்தியாக ஐ.நா பாதுகாப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. பாதுகாப்புச் சபையில் இருந்து விலகிய அமெரிக்காவும் அடுத்த தடவைகளில் திரும்பி வரவும் முடியும்.





13வது திருத்தமானது தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை தேடுவதற்கான திறவுகோலே தவிர அது தீர்வு அல்ல. எனவே நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதனையே சர்வதேசமும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.





இக் கூட்டத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சியின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.