தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அரசியல் லாபம் தேடுகிறது அரசு

Politics 3 ஆண்டுகள் முன்

banner

பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சரிந்து செல்லும் தனது செல்வாக்கை மீட்பதற்கான கோத்தாபய அரசின் திட்டமே யாழ்ப்பாணம் மாநகர மேயரின் கைது. புலிப் பூச்சாண்டி காட்டி தங்கள் வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பும் ராஜபக்சக்களின் வழமையான உத்தியே இது. தங்கள் அரசியல் நலனுக்காக தமிழ் மக்களை இவ்வாறு அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை அரசு நிறுத்த வேண்டும்.





இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன்.





யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது-





" தமிழர் தரப்பில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் இதுவரை பிரயோகிக்காத ஓர் அதிகாரத்தை - அதை விரிவாக பொருள்கோடல் செய்து வி.மணிவண்ணன் முதற்தடவையாகப் பிரயோகித்துள்ளார். அது சிங்கள தேசத்தை கிலிகொள்ளச் செய்துவிட்டது. அவர்களுக்கு சீருடையோ, அதன் நிறமோ பிரச்சினையல்ல. அதிகாரப் பிரயோகிப்பை ஆட்சியாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை.





அரசுக்குத் தெற்கில் தேய்ந்து செல்லும் தங்கள் வாக்குவங்கியை தூக்கி நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை இப்போது நடத்தினால் அவர்கள் படுதோல்வியைச் சந்திக்க நேரும். அதனால் தங்கள் வழமையான உத்தியை இப்போதும் ஆரம்பித்துவிட்டனர்.





போரில் வென்றோம் என்று கூறி 2010ஆம் ஆண்டு பெரும்பான்மையின வாக்குகளைப் பெற்றனர். ஈஸ்டர் தாக்குதலை முன்னிறுத்தி 2019ஆம் ஆண்டு தேர்தலில் வென்றார்கள். இப்போது தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க மீண்டும் புலிப் பூச்சாண்டியைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.





மாற்றுக் கருத்தாளர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் என அனைவரையும் அடக்கி ஒடுக்கவே இப்போதைய அரசு விரும்புகின்றது. ஊடகங்கள் மீதான வழக்குகள், நகர மேயர் கைது என்று இந்த அரசின் அடக்குமுறைப் போக்கு நீள்கின்றது. தமிழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விடக் கூடாது என்பதுதான் அவர்களின் சிந்தனையாகவுள்ளது.





தங்களின் இந்த நோக்கத்துக்காக, உலக நாடுகளால் மிக மோசமான சட்டம் என்று சொல்லப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுத்திருக்கின்றது. இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தும் நிலையில், தற்போதைய அரசு தொடர்ந்தும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை ஒடுக்க முயல்கின்றது. அரசின் இந்தப் போக்கை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.





இப்படியான மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், உயிர்க் கொலைகளைக் கண்டு அடங்கியிருந்து இருந்தால் இப்போது இந்தத் தீவில் தமிழர்கள் என்ற இனமே இருந்திருக்காது. அராஜக அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். - என்றுள்ளது.