தடுப்பூசியில் தடுமாறும் ஆஸ்திரேலிய அரசு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

உலக நாடுகள் அனைத்தும், கொரோனா அலையால் தட்டுத்தடுமாறி -  விழிபிதுங்கி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலையில் உள்ளன. எத்திசையிலிருந்து வைரஸ் பாயும் என்பதை அறிய முடியாது, நாடுகள் எல்லைகளை மூடியுள்ளன. பல நாடுகளில் இன்னும் பொது முடக்கம் அமுலில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீள ‘தடுப்பூசியே’ இறுதி அஸ்திரமாக கருதப்படுகின்றது. எனவே, தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதிசெய்ய நாடுகள் அணிவகுத்து நின்றன. முன்கூட்டியே பதிவுகளை செய்தன. அவ்வாறு முன்பதிவு செய்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.





ஆனாலும் ஆஸ்திரேலியாவில் தற்போது  40 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு அதிகபட்ச சாதனை என்பது,  தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவைச் செய்வது தான். அப்பயே தட்டுத்தடுமாறி முன்பதிவுகளை  மேற்கொண்டாலும் தடுப்பூசிக்காக ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய  தேவையுள்ளது. வயதின் அடிப்படையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படும் ஊசித்திட்டத்தில் பைசரா, ஆஸ்ட்ராசெனிகாவா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.





ஆஸ்திரேலிய அளவில், முதல் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, வெறும் 9 சதவீதம் மக்களுக்கே இரண்டு தடுப்பூசிகளும் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளன என தரவுகள் கூறுகின்றன. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருப்பவர்களின் எண்ணிக்கைப் பட்டியலின் பாதாளத்தில், ஆஸ்திரேலியா இருக்கிறது.





கடந்த பெப்ரவரி மாதம் முதல், தடுப்பூசியை அறிமுகப்படுத்திய மூன்றே மாதங்களில், இலக்குகளையும், திட்டங்களையும் ஆஸ்திரேலிய காமன்வெல்த் அரசாங்கம் பலமுறை மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 





கடந்த ஆண்டுக்கு பிறகு, மிகக் கடினமான சூழலில், விக்டோரியாவில் தொடங்கி பல மாநிலங்கள் கோவிட்19 பாதிப்புகளால் முழுமுடக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள், கூடிய விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தடுப்பூசிகள் திட்டமிடல் மற்றும் பங்களிப்பு சார்ந்த மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான பதற்ற நிலை, மக்களிடையே பலத்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். 





அரசாங்கத்தின் இலக்கு என்பது, எதிர்வரும் அக்டோபர் 2021-க்குள் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பதாகும். ஆனால், ஆஸ்ட்ராசெனிக்கா மருந்திற்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ ஆலோசனையின் படி, 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதற்கான அனைத்து இலக்குகளும் கைவிடப்பட்டன. 





இந்நிலையில் அதிக தடுப்பூசிகளைச் செலுத்தியதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகள் தடுப்பூசி கிடைக்காமல் போராடும் பொழுது, பணக்கார நாடுகள் தடுப்பூசிகளைப் பெருமளவில் கொள்முதல் செய்து பதுக்கியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 





கோவிட் தடுப்பூசிகளை செலுத்த ஐந்து தனி ஒப்பந்தங்களை, ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருந்தது. இதில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனிக்கா மருந்துகள் தற்காலிகமாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய சனத்தொகையின் 4 மடங்கு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடும் அளவிற்கு தங்களது ஒப்பந்தங்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தது அரசு. 





வானளாவிய திட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த சில மாதங்களில் தடுப்பூசி செலுத்துவது சார்ந்த எந்த ஒரு இலக்கையும் அரசாங்கம் அடைய முடியவில்லை என்பதே இன்றைய நிலை.   இந்த வேகத்தில் பயணித்தால், ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தும் 40 மில்லியன் இலக்கை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் எட்ட முடியும். 





இந்நிலையில், தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள் மட்டும் நாளுக்கு நாள் புதியவையாக வந்துகொண்டிருக்கின்றன. 





 ”16 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு, அஸ்ட்ராசெனிக்காவைவிட பைசர் தடுப்பூசியே பாதுகாப்பானது என  ATAGI என்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், கோவிட் பாதிப்பை ஒப்பிடுகையில், 60 வயதிற்குட்பட்டவர்கள் அஸ்ட்ராசெனிக்கா மருந்தை, பைசர் கிடைக்காத பட்சத்தில் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளது. மேலும், அது பற்றிய நன்மைகள் மற்றும் அபாயங்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம் எனவும் வலியுறுத்தி உள்ளது அந்த அமைப்பு.





இத்தகைய, ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் நிறைந்த தகவல்களை வைத்துக் கொண்டு, தாம் எந்த தடுப்பூசி எடுத்துக் கொள்வது என்ற குழம்பிய நிலையிலேயே மக்கள் உள்ளனர்.





கோவிட் என்ற பெருந்தொற்றிலிருந்த மீள்வதெனில் தடுப்பூசியே ஒரேவழி.   





எழுத்து - கோகுலன்





சிட்னி