காலியான கஜானாவே பஸிலிடம் கையளிப்பு

banner

திறைசேரி வெறுமையான நிலையிலேயே பஸில் ராஜபக்ச நிதி அமைச்சு பதவியை பொறுப்பேற்றார். எனவே, திறைசேரியை நிறைப்பதற்கான கடப்பாடு அவருக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளார் - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ திறைசேரி வெறுமையடைந்திருந்த சூழ்நிலையிலேயே பஸில் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவியை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே திறைசேரியை நிரப்புதற்கான பொறுப்பு அவருக்கு உள்ளது. திரைசேரி நிரம்ப வேண்டுமென்றால் பொருளாதாரம் இயங்குநிலையில் இருக்க வேண்டும். இதற்கான திட்டத்தை செயற்படுத்த பொருளாதார நிபுணர்கள் உட்பட சகல தரப்புகளுடனும் பஸில் ராஜபக்ச தற்போது பேச்சு நடத்திவருகின்றார்.





அதேபோல வெளிநாடுகளுக்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது. மக்களின் வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். பொருட்களின் விலை குறைய வேண்டும். பஸிலின் வருகையோடு இவை நடக்கும் என நம்புகின்றோம். பஸில் ராஜபக்சவுக்கு அனுபவம் இருக்கின்றது. போர் உட்பட நெருக்கடியான காலங்களில் பொருளாதாரத்தை சிறந்த வகையில் முகாமை செய்தவர்.” -என்றார்.