ஜனாதிபதியை சிங்கள மக்களே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கடவுளாகக் கருதிய சிங்கள மக்களே இன்று அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் அரசு படுதோல்வியடையும் என்பது உறுதியென்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.





இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு,





“ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவை கடவுளாகவே சிங்கள மக்கள் கருதினர். அவர் அரசியல் வாதி அல்லர். சிவில் நிர்வாகி என்பதால் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும், அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் மக்கள் நம்பினர். எனினும், அதே இன்று அவரை திட்டுவதற்கு தொடங்கிவிட்டனர். அந்தவகையில் எல்லா வழிகளிலும் இந்த அரசு படுதோல்வியடைந்துள்ளது. தேர்தலொன்று வரும்பட்சத்தில் அதில் எதிர்க்கட்சியே வெற்றிபெறும்.





இன்று நாட்டில் உரம் இல்லை. கையிருப்பு இல்லை. இந்நிலையில் நாடகத்துக்காக பஸிலை கொண்டுவந்துள்ளனர். அவர் என்ன வித்தைக்காரரா?





மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம். அடுத்த வருடம் வைக்கப்படும் என ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே அரசின் திட்டமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் வெற்றி நமதே.” - என்றார்.