வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் நிதி வங்குரோத்து நிலை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிதி வங்குரோத்து நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல்லா துறைகளும் சரிவை சந்தித்துள்ளன - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். 





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ இலங்கையானது சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் எதிர்கொள்ளாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நிதி ரீதியில் வங்குரோத்தடைவதற்கான முதல் அடி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1988 மற்றும் 2008 காலப்பகுதியில் இதற்கு அண்மித்த வகையிலான நிலைமை காணப்பட்டது. 88 மற்றும் 2008 இல் எவ்வாறான நிலைமை நாட்டில் நிலவியது என்பது அனைவருக்கும் தெரியும். யுத்தம் நிலவியது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சமூகம் பிளவுபட்டிருந்தது. 





எனினும், இவ்விரு காலப்பகுதியிலும் எமது நாட்டு அரசின் வெளிநாட்டு நிதி வளத்துக்கு சந்தை திறந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தில் இருப்பும் இருந்தது. இதனால் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் நாடு வங்குரோத்து அடையவில்லை. 





இன்று நாம் வரலாற்றில் முதன்முறையாக நிதி வங்குரோத்து நிலைக்கான முதல் அடியை வைத்துள்ளோம். இதன் பிரதிபலன் எவ்வாறு அமையுமென்ற அனுபவம் எமக்கு இல்லை. ஆனால் லெபலான், கிரிஸ், ஆர்ஜென்டினா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலை குறித்துதான் அனுபவம் உள்ளது. 





எமது நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். புதிய வறுமை பிரிவொன்று உருவாகியுள்ளது. சகலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சகல துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. அதேபோல ஆளும் மற்றும் எதிரணிமீதான அரசியல் நம்பிக்கையும் சமூகத்தில் அற்றுபோயுள்ளது.” - என்றார்.