சாகரவும், முஸ்லிம் எம்.பிக்களும் கம்மன்பிலவுக்கு கை கொடுத்தது ஏன்?

banner

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதும் ஆளுங்கட்சிக்கு சார்பாக நேற்று செயற்பட்டனர். 





இதன்படி வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து ரிஷாட் பதியுதினின் கட்சி உறுப்பினர்கள் மூவரும் வாக்களித்தனர். ரிஷாட் பதியுதீன் சபைக்கு சமூகமளிக்கவில்லை. 





ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரேரணைக்கு சார்பாக வாக்களித்திருந்தாலும் அக்கட்சியின் ஏனைய எம்.பிக்கள் வாக்கெடுப்பை தவிர்த்து, ஆளுந்தரப்புக்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தினர்.





அகில இலங்கை காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஐவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





அதேபோல 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அரவிந்தகுமார் எம்.பியும் பிரேரணை எதிர்த்து வாக்களித்தார்.





அதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலகவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் கம்மன்பிலவுக்கு ஆதரவாகவே வாக்களித்தார்.





அரசுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் விஜயதாச ராஜபக்ச எம்.பி. வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை. 





ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக அல்லாமல் தனி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதை விமர்சித்த ரணில் விக்கிரமசிங்க, வாக்கெடுப்பை புறக்கணிப்பார் என அரசியல் களத்தில் எதிர்ப்பார்த்த நிலையில் அவர் அரசுக்கு எதிராக வாக்களித்தார்.