தலிபான்களை தாக்க தயாராகும் ‘பஞ்ச்ஷீர்’ புலிகள்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதாக கூறும் தலிபான்களின் ஆட்டம், ‘பஞ்ச்ஷீர்’ பள்ளத்தாக்கில் எடுபடவில்லை. ஒருவேளை பஞ்ச்ஷீருக்கு எதிராக தலிபான்கள் களம் இறங்கினால், அங்கு கொரில்லா தாக்குதல் நடத்த போராளிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு வடக்கே உள்ள இந்துகுஷ் மலையானது மிகவும் உயரமானது. அவ்வளவு சீக்கிரம் மற்ற நாட்டு படைகள் இங்கு நுழைந்துவிட முடியாது. இங்குள்ள ‘பஞ்ச்ஷீர்’ என்ற பள்ளத்தாக்கு பகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.





ஆப்கானின் புகழ்பெற்ற இராணுவத் தளபதி அஹ்மத் ஷா மசூத் என்பவர், சோவியத்-ஆப்கானிஸ்தான் போர் மற்றும் தலிபான்களுடனான உள்நாட்டுப் போரின்போது ‘பஞ்ச்ஷீர்’ மலைப்பகுதியில்தான் பதுங்கியிருந்தார். இன்றைய நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியதாக தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், ‘பஞ்ச்ஷீர்’ பகுதியானது ​​தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.





‘பஞ்ச்ஷீர்’ புலிகள் எனப்படும் போராளிகள், இப்பகுதியை பாதுகாத்து வருவதால், தலிபான்களால் அங்கு நுழைய முடியவில்லை.  கிட்டதிட்ட 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை மேற்கத்திய நாடுகள் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தது. அவர்களின் ஆசியால் ஆப்கான் நாட்டின் உள்துறை அமைச்சரான அம்ருல்லா சலேஹ் மற்றும் மறைந்த ராணுவ தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் ஆகிய இருவரும் தலிபான்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்து வந்தனர்.





தற்போது அவர்கள் ‘பஞ்ச்ஷீர்’ பகுதி மக்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்காக,  ‘பஞ்ச்ஷீர்’ போராளிகள் குழுவானது, தலிபான்களுக்கு எதிராக போராட வியூகங்களை வகுத்து கொரில்லா தாக்குதலை நடத்த தங்களை ஆயத்திப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





இதுகுறித்து, ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு அஹ்மத் மசூத் அளித்த பேட்டியில், ‘இன்று நான் ‘பஞ்ச்ஷீர்’ பள்ளத்தாக்கில் இருந்து எழுதுகிறேன். என் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி போராடத் தயாராக இருக்கிறேன். எங்களது போராளிகள் தலிபான்களை தொடர்ந்து எதிர்த்துப் போராடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.





ஆப்கானிஸ்தான் உளவுத்துறைக்கும், மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றிய உள்துறை அமைச்சர் சலே கூறுகையில், ‘நான் தலிபான்களுடன் இணைந்து பணியாற்றமாட்டேன். தலிபான்களுக்கு ‘பஞ்ச்ஷீர்’ பகுதியானது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்றார்.





அதேநேரம்,  ‘பஞ்ச்ஷீர்’ பள்ளத்தாக்கை கைப்பற்ற தலிபான்கள் தரப்பில் இன்னும் எவ்வித நேரடி நடவடிக்கையும் எடுக்கத் தொடங்காததால், மசூத், சலே போன்றோரின் வார்த்தைகள் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. காரணம், பஞ்ச்ஷீரைச் சுற்றியும் தலிபான்கள் சூழ்ந்துள்ளனர். கிட்டதிட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் அங்குள்ள போராளிகள் தலிபான்களுக்கு எதிராக போராட முடியாது. தலிபான்களுக்கு இணையாக ஆயுதங்களை ‘பஞ்ச்ஷீர்’ போராளிகள் வைத்திருந்தாலும், அவர்களுக்கு சரியான தலைமை கிடையாது.
Advertisement