பேராயரை சம்பந்தனுடன் ஒப்பிட்டு தேரர் கடும் விமர்சனம்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

21/4 தாக்குதல் சம்பவத்தை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்வதற்கு பேராயரும், கத்தோலிக்கச் சபையும் முற்பட்டால் பேராயர், சம்பந்தனுக்கு நிகரானவராகிவிடுவார். கத்தோலிக்க சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிவிடும் - என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார்.





கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" அரச தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கும், மாநாடுகளில் உரையாற்றுவதற்கும் பேராயரின் அனுமதி தேவையா? 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரச்சினையை வேறு திசையில் கொண்டுசெல்வதற்கு பேராயர் முயற்சித்துவருகின்றார்.





21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொய்யுரைத்து, விசாரணைகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் இத்தாலி மற்றும் வத்திக்கானுக்கு செல்கின்றனர் என்பது எப்படி பேராயருக்கு தெரியும் என கேட்கின்றோம்.





நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை பேராயர், உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். அத்தகையை நடவடிக்கைகளை அவர் நிறுத்த வேண்டும்.





இப்பிரச்சினையை சர்வதேச அமைப்புகளிடம் கொண்டுசெல்வதற்கு பேராயர் மற்றும் கத்தோலிக்க சபை நடவடிக்கை எடுக்கமானால், பேராயர் என்பவர் சம்பந்தன், விக்கேஸ்வரனுக்கு சமனானவராகிவிடுவார். கத்தோலிக்க சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகராகிவிடும். தான் பிறந்த மண்ணுக்கு துரோகம் இழைப்பவர்களை தேசத்துரோகி என்றே விளிக்க வேண்டும்.





ஜனாதிபதி பேராயரை சந்திப்புக்கு அழைத்துள்ளார். நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவ்வழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன்பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பது தெளிவாகின்றது. 21/4 தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரலை உடன் மீளப்பெறவும்." -என்றார்.