கோட்டா ஆட்சிக்கு கடவுள் சாபமா?

banner

" ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசை, ஆட்சிக்கு கொண்டுவந்தமையானது, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோல் ஆகிவிட்டது. மக்கள் கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்." - என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" சுபீட்சத்தின் தொலைநோக்கு திட்டத்தின்கீழ் நாடு நிர்வகிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்து வந்தாலும், அது தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி - மகிழ்ச்சி இல்லை. இந்நாட்டுக்கு தேவ சாபம் ஏற்பட்டுவிட்டதா என எமக்கு அழைப்பை ஏற்படுத்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் இந்நாட்டுக்கு சிறந்த தலைவர் கிடைத்துவிட்டார் என மக்கள் அதனை கொண்டாடினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பலர் பதவி விலகுகின்றனர். மேலும் சிலர் வேடிக்கை பார்க்கின்றனர். மறுபுறத்தில் நாடு சீன கொலணியாக்கப்பட்டுவருகின்றது. ஆக சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதைபோலவே உள்ளது. அவ்வாறு அல்லாவிட்டால் இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலைமையே ஏற்பட்டுள்ளது." - என்றார்.