மாகாண தேர்தல் நடக்குமா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இறுதியான – உறுதியான முடிவொன்றை எடுக்கவில்லை என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் புலனாகின்றது.





2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் வெளியான கையோடு, இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் தொடர்பான கருத்தாடல்களும் வலுப்பெற்றன.





ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை பழைய முறைப்படியே (விகிதாசார) நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச , நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டத்தில் இணக்கம் வெளியிட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்த பிறகே, தேர்தல் தொடர்பில் அரசியல் களத்திலும், ஊடக பரப்பிலும் அதிகம் பேசப்பட்டது.





இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.





ஆனால் 2022 மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என மேலும் சில அமைச்சர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.





இதற்கிடையில் தேர்தல் முறைமை மாற்றப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் வழங்கியுள்ளார். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்றாலும், எந்தக் காலப்பகுதியில் அது நடைபெறும் என்பது தொடர்பில் உறுதியான பதில் அரச தரப்பிடம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.