'விமர்சனம் வேண்டாம் - பிரச்சினையை பேசி தீர்ப்போம்'

banner

" அரசுக்குள் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், உள்ளேயே பேசி தீர்த்துக்கொண்டு - முன்னோக்கி பயணிப்போம்." - இவ்வாறு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான 'மொட்டு' அரசின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதில் பங்கேற்றனர்.





இதன்போது உரப்பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.





சந்திப்பு முடிவடைந்த பின்னர் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன,





" உரப்பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, நாட்டின் பாதுகாப்பு உட்பட அனைத்து துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. அதேபோல வெளியில்சென்று விமர்சனங்களை முன்வைக்காது, அவை தொடர்பில் அரசுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறும், ஒற்றாக பயணிப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்."- என்றார்.





அதேவேளை, சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,





" பெருந்தோட்டத்துறைக்கு இரசாயன உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் நாம் ஒரு அடி பின்வாங்குகின்றோம்.





அத்துடன், வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணப்பொதியொன்று வழங்கப்படும்." - என்றார்.





" கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் பற்றி பேசப்படவில்லை. கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அது பற்றி கலந்துரையாடுவோம்." - என்று அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.