சீனத் தூதுவரை அழைத்து விளக்கம் கோருமாறு சஜித் வலியுறுத்து

Politics 2 ஆண்டுகள் முன்

banner

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்து இலங்கைமீது வணிகத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அடிக்கடி தேசப்பற்று குறித்து கதைக்கும் ஆட்சியாளர்கள் மௌனம் காக்கின்றனர். சீனத்தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோருவதற்கு ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பில்லையா" - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.





வத்தளையில் நேற்று நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உரம் தரக்குறைவு என்பதால் கப்பலை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு திருப்பி அனுப்பட்ட கப்பலை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் மீள அனுப்பியுள்ளனர். அந்த கப்பல் தற்போது எமது கடல் எல்லைக்குள் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகின்றனர்?





வணிகத்தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளனர். இது தொடர்பில் தமக்கு தெரியாது என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





" தரக்குறைவான உரத்துக்கு எம்மால் கொடுப்பனவு செலுத்த முடியாது. எமது நாட்டின் பொருளாதார அடையாளத்தை கறுப்பு பட்டியலில் இணைக்ககூடாது. அது தவறான நடவடிக்கை." என சீனத்தூதுவரை அழைத்து, தெரிவிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பிள்ளையா? எங்கே உங்கள் (அரச தரப்பு) தேசப்பற்று?





சீனத் தூதுவரை அழைத்து, எமது நாட்டு வங்கிக் கட்டமைப்புடன் விளையாட வேண்டாம், உடனடியாக கறுப்பு பட்டியலை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு தைரியம் இல்லையா?





உயிர்த்த ஞாயிறு தாக்குதல்





உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் எமது ஆட்சியின்கீழ் கண்டுபிடிக்கப்படுவார்கள். எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படும் அதிஉச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.