'சுகாதாரப்பாஸ்' - ஜூலை 31வரை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி!

banner

பிரான்ஸில் அமுலில் உள்ள கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளை அடுத்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரைநீடிப்பதற்கு நாடாளுமன்றம் பச்சைக்கொடிகாட்டியிருக்கிறது.





நீடிப்புக்கு அனுமதி கேட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு ஆதரவாக 118 வாக்குகளும் எதிராக 89 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளன.





ஒருவர் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியிருப்பதை காகிதம் மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் சுகாதாரப் பாஸ் (pass sanitaire) எனப்படுகிறது. உணவகம், அருந்தகம் சினிமா போன்ற பொது இடங்களுக்குள் நுழைவதற்கு இந்தப் பாஸ் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.





நாடாளுமன்றத்தில் இன்று காலை நிறைவேறிய இந்தச் சட்ட மூலத்தின் விதிகள்கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதற்கான சுகாதார அவசரகால சட்டங்களை நீடிப்பதற்கும் அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.





ஐரோப்பாவில் தொற்றுக்கள் பெருகுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்திருப்பதை நினைவூட்டியஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்தக் கட்டத்தில் சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கைவிட்டு விடமுடியாது என்று வாதிட்டார்.





இந்தச் சட்ட மூலம் தொடர்பில் அடுத்தஆண்டு பெப்ரவரியில் மற்றொரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகளான வலது, இடது சாரிஅணிகள் கேட்டிருக்கின்றன.





மக்ரோன் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கட்டாயப் பாஸ் நடைமுறையே பிரான்ஸில் அதிக எண்ணிக்கையானோர் விரைந்து தடுப்பூசி ஏற்றுவதற்குத்தூண்டலாக அமைந்தது. ஆனால் அரசை விமர்சிப்பவர்கள் அதனை மக்ரோனின் சர்வாதிகாரச் செயல் என்று கூறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.





குமாரதாஸன். பாரிஸ்.