மக்கள் எழுச்சியால் ஆட்சியையே மாற்ற முடியும் - சுமந்திரன் சூளுரை

banner

மக்கள் எழுச்சியால் அரசின் கொள்கையை மாற்ற வைக்க முடியும். தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் - என்று சூளுரைத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பியுமான எம் ஏ சுமந்திரன்.





இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. இன்று மேலும் கூறியவை வருமாறு,





" செயற்கை இரசாயனத்தை தடை செய்யவேண்டும் என்பதற்காக திடீரென்று ஒரே இரவில் அதனை செய்துவிடமுடியாது. ஆனால் இந்த அரசு அவ்வாறுதான் செய்தது. அதனால்தான் இன்று பிரச்சினைகள் வலுத்துள்ளன. விவசாயிகள் போராடுகின்றனர்.





நாங்கள் செயற்கை இரசாயனத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர். இயற்கை முறையில் பயிர் செய்யப்பட வேண்டும். அது மனித சுகாதாரத்துக்கு நல்லது. நிலத்துக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு நீண்ட காலம் தேவைப்படுகிறது.





பல நாடுகளில் மாற்றத்திற்கான காலஅவகாசமாக 20 வருடங்கள் வழங்கப்படுகின்றன.





இம்முறை உள்ளூர் பயிர்ச் செய்கையால் வருகின்ற உணவு மக்களுக்கு போதாமல் இருக்கப்போகிறது. ஒரு பாரிய பஞ்சம் நாட்டிலே ஏற்படபோகிறது. அதாவது உணவு பற்றாக்குறை ஏற்படப்போகிறது. இதைப்பற்றி நாங்கள் பல தடவை எச்சரிக்கை செய்திருக்கிறோம் அரசாங்கம் பிடிவாதமாக இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. ஆகையினாலே மக்கள்தான் திரண்டு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.





மக்கள் எழுச்சியால் அரசின் கொள்கையை மட்டுமல்ல தேவையேற்பட்டால் அரசையே மாற்ற முடியும்." - என்றார்.