'மேதகு பிரபாகரன்' - சபையில் நடந்தது என்ன?

banner





" எங்களுடைய தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தி போராடியிருந்த எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்….." என நாடாளுமன்றத்தில் செல்வராசா கஜேந்திரன் எம்.பி., உரையாற்றிக்கொண்டிருக்கையில், அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.





ஒரு பயங்கரவாதியை எப்படி தேசியத் தலைவரென விளிக்கமுடியும் என கேள்வி தொடுத்துடன், கஜேந்திரனின் உரையை ஹென்சாட்டிலிருந்து நீக்குமாறும் வலியுறுத்தினர்.





நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,





தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டிருந்த கருத்தை நிராகரித்ததுடன், கடும் கண்டனத்தையும் வெளியிட்டார்.





" வடக்கு, கிழக்கில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் சிறிதரன் எம்.பி. நேற்று (நேற்று முன்தினம்) கருத்து வெளியிட்டிருந்தார். இந்த போதைப்பொருள் எமது சமூகத்தை மோசமாக அழித்துக்கொண்டிருப்பது தொடர்பில் அவர் பேசிக்கொண்டிருக்கையில், அந்த உண்மையை ஒரு துணை இராணுவக்குழுவின் தலைவரும், இந்த அவையில் அமைச்சராக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இங்கே பொய்யான கருத்தை முன்வைத்தார்.





அதாவது எங்களுடைய தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தி போராடியிருந்த எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறினார். இதனை நான் கண்டிக்கின்றேன். மறுக்கின்றேன்." - என்று செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.





இதன்போது குறுக்கீடு செய்து ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,





" இந்த உயரிய சபையில் தேசியத் தலைவராக பயங்கரவாதியொருவரின் பெயரை விளித்துள்ளார். எனவே, அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கவும்." - சபைக்கு தலைமைதாங்கிய வேலுகுமார் எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த வேலுகுமார் எம்.பி.,





" அவருக்கு (கஜேந்திரன்) கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை என்னால் தடுக்க முடியாது. முறைப்பாடு ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும். அது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்." - என்று இடித்துரைத்தார்.
இதனால் ஆளுங்கட்சி எம்.பியான முஸம்மில் சீற்றமடைந்தார்.
" புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். லட்சக்கணக்கான மக்களை கொன்றவரை வீரராக கருதமுடியாது. இது கருத்து சுதந்திரம் அல்ல. குரோதத்தை விதைக்கும் செயல். சபைக்குள் கதைக்ககூடாத விடயம். எனவே, ஹென்சாட்டில் இருந்து அவரின் உரையை நீக்கவும்." - எனவும் முஸம்மில் எம்.பி. வலியுறுத்தினார்.





" இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும்." என சபைக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த வேலுகுமார் எம்.பி. கடுந்தொனியில் பதிலளித்தார்.





எனினும், ஆளுங்கட்சி எம்.பிக்கள் அடங்கவில்லை. சபைக்கு தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த வேலுகுமார் எம்.பியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.





" நீங்கள்தான் சபைக்கு தலைமை தாங்குகின்றீர்கள். நீக்குவது பற்றி நீங்கள் முடிவெடுக்கலாம்." -என வலியுறுத்தினர்.





"சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் நிலைப்பாட்டில்தான் நான் உள்ளேன்." என அறிவித்துவிட்டு, ஆளுங்கட்சி எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார் வேலுகுமார் எம்.பி.





இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய பிரமீத பண்டார தென்னகோன்,





" நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை பயன்படுத்தி கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது. தீவிரவாதத் தலைவனை எப்படி தேசத் தலைவர் என குறிப்பிடமுடியும். இதற்கு இடமளிக்க வேண்டாம். பிரபாகரனை நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோருடன் ஒப்பிட முற்படுகின்றனர். பிரபாகரன் ஓர் கொலையாளி." - என்றார்.





இறுதியாக கருத்து வெளியிட்ட செல்வராசா கஜேந்திரன் எம்.பி.,
" இந்த நாடு அழிவுப்பாதையில் செல்கின்றது. வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு நெருப்பெடுக்கும் மந்திரிகளாக இருக்காதீர்கள் என அந்த அம்மணிக்கு கூறிக்கொள்கின்றேன்.





எங்களுடைய தலைவரை இழிவுப்படுத்திய டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். " -என்றார்.