'நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு'

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகணரத் தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (25) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.





இந்த உபகரணத் தொகுதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.





வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ட்ரோன் எதிர்ப்புக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாடல் சாதனங்கள் போன்றவை இத்தொகுதியில் அடங்குகின்றன.





நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, விமானப் படையின் பணியாட்தொகுதியின் பிரதானி எயார் வைஸ் மார்ஷல் எம்.டி.ஈ.பி.பாயோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேனுக ரொவல், பிரதிப் பணிப்பாளர் நாயகம் கப்டன் ரி.டி.எஸ்.டி.சில்வா மற்றும் பாராளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் மஞ்சுள செனரத் ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.





இந்த உபகரணத் தொகுதியை இறக்குமதி செய்வதாகவிருந்தால் 19 மில்லியன் ரூபாவை அண்மித்த நிதியைச் செலவுசெய்ய வேண்டியிருக்கும். எனினும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மூலம் உள்நாட்டில் இவற்றை உற்பத்தி செய்ததன் ஊடாக 7 மில்லியன் ரூபாவுக்கு அண்மித்த தொகையே செலவுசெய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.





இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதற் தடவையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரதும் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியின் போது அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தேவைக்கு இணங்க இந்த உபகரணத் தொகுதி கையளிக்கப்பட்டிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.