உரையாடலை ஒட்டுக் கேட்கிறதா சி.ஐ.டி.? - சபையில் முறைப்பாடு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமது கையடக்க தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.





2015 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை தனக்கு பெற்றுக்கொடுத்த தனது நண்பரிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.





தனது தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவரிடம் மிக நீண்ட நேரம் விசாரணை இடம்பெற்றதாகவும் இதன்மூலம் தனது தொலைபேசி அழைப்புகள் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் செவிமடுக்கப்படுவது புலனாவதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.





அவ்வாறு செவிமடுப்பதற்கு குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 124 ஆவது சரத்திற்கு ஏற்ப, நீதவானின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய முஜிபுர் ரஹ்மான், அவ்வாறு எத்தகைய நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.





இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் தொலைபேசி சேவை வழங்குநர்களை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறும் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.