மலையக மக்களுக்கு காணி உரிமை அவசியம்

banner

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாத உரையின்போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், அம்மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.





அத்துடன், சிறு வயதில் தான் தலவாக்கலையில் தொழில்செய்த அனுபவத்தையும் செல்வம் எம்.பி. சபையில் பகிர்ந்துகொண்டார்.





” தலவாக்கலையில் எனது சித்தப்பாவின் கடையொன்று இருந்தது. சிறு வயதில் அங்குதான் வேலை செய்தேன். தோட்ட மக்கள் பொருட்கள் வாங்கிய பிறகு, மாதம் ஒருமுறை அவர்களிடம் பணம் அறவிட செல்வோம். அப்போது அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் உணர முடிந்தது. மனம் தாங்காது.





இந்நிலைமை மாறவேண்டும். இன்று மாற்றம் இடம்பெற்றுவருகின்றது. அப்பகுதி மக்களும் முன்னேற்றமடைந்துவருகின்றனர்.





எனவே, மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது. அது அதிகரிக்கப்பட வேண்டும். ஆயிரம் ரூபாவை வைத்துக்கொண்டு எப்படி வாழ முடியும்? மக்கள் வதைபடுகின்றனர். கம்பனிகள் இலாபத்தை அனுபவிக்கின்றது. எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.”- என்றார்.