ஐ.நா. உயர் அதிகாரிகள் கொழும்புக்கு படையெடுப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளனர் என்றும், இலங்கையை மட்டும் இலக்கு வைத்து உருவாக்கப்படும் பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" சர்வதேச நாடுகளிடம் மண்டியிடவேண்டாம் என எதிரணி எம்.பி. சுட்டிக்காட்டினார். நாம் ஒருபோதும் மண்டியிடமாட்டோம். நாட்டின் தன்மானத்தை - கௌரவத்தை பாதுகாத்துக்கொண்டுதான் வெளிவிவகாரக் கொள்கையை செயற்படுத்திவருகின்றோம்.





ஐக்கிய நாடுகள் சபையில் ஆரம்பம் முதல் இலங்கை அங்கம் வகிக்கின்றது. ஐ.நாவுடன் நாம் தொடர்ச்சியாக தகவல்களை பரிமாற்றிவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் நாட்டுக்கு வருகின்றனர். ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்கள் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்லலாம். எம்முடன் பேச்சுகளை நடத்தலாம்.





ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் ஆணையாளரை நாம் ஏற்கின்றோம். ஆனால் திட்டமிட்ட அடிப்படையில் இலங்கையை இலக்குவைத்து, சாட்சியங்களைத் திரட்டி, சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கான விசேட பொறிமுறையை ஏற்கமாட்டோம். சரியான விடயங்களை ஏற்போம். அதற்காக எல்லா விடயங்களுக்கு தலைசாய்க்க முடியாது. - என்றார்.