ஓயவில்லை மோதல் - சு.கவை மீண்டும் சீண்டுகிறது மொட்டு கட்சி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" அரசின் கொள்கைத் திட்டத்தை ஏற்கமுடியாவிட்டால் கூட்டணியிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறலாம். எமது கட்சியை விமர்சிப்பதால் மீளெழுச்சி பெறலாம் என சுதந்திரக்கட்சி நினைப்பது நடக்காத காரியமாகும்."- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.





இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், அக்கட்சியின் உறுப்பினர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்தான் 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டத்தில் உள்ளன. அவற்றை அமுல்படுத்தவே பங்காளிக்கட்சிகள் அரசுடன் கூட்டணி அமைத்தன. மக்களும் ஆணை வழங்கியுள்ளனர்.





மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எமது பயணத்தின்போது சில கொள்கைத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கையில் சர்ச்சை உருவாகலாம். உதாரணமாக உரப்பிரச்சினையை எடுத்துக்கொள்ளலாம். சேதனப் பசளை திட்டம் சில இடங்களில் கைகூடவில்லை. இதனை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரக்கட்சி முயற்சிக்கின்றது.





சிலவேளை மேற்படி திட்டம் வெற்றியளித்திருந்தால், தனது ஆட்சியில்தான் அடித்தளம் இடப்பட்டது என அறிவிப்பு விடுத்து அதற்கு மைத்திரிபால சிறிசேன உரிமைகோரி இருப்பார். தற்போது நெருக்கடி என்றதும் தமக்கும் அதற்கும் தொடர்பில்லை என காண்பித்து அரசியல் நடத்துகின்றனர். கூட்டணி அரசியலில் இவ்வாறு நடக்கக்கூடாது.





அரசின் கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனில் விலகுவதுதான் நல்லது. இரு பக்கங்களிலும் கால்களை வைத்து பயணிக்ககூடாது. வரப்பிரதாசங்களை அனுபவித்துக்கொண்டு, விமர்சனங்களை முன்வைக்கும் இவர்கள் பற்றி மக்கள் நன்கறிவார்கள்.





ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் சென்று சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தவர்களே இன்று அக்கட்சியை வழிநடத்துகின்றனர்.