'ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீள பெறமுடியும்'

banner

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்படவில்லையெனவும் அது 70 வருட குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதமரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.





பாராளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி முன்வைத்த விடயம் ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,





வேண்டுமென்றால், நாளையே சீனாவுடனான ஒப்பந்தத்தை ரத்துச் செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் தெரிவித்தார்.





பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.





அவர் சபையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, குறுக்கீடு செய்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறைமுகம் 70 வருட குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது என்று உறுதியாகத் தெரிவித்தார்.





ரணில் விக்கிரமசிங்கவுடன் நான் விவாதிக்கப்போவதில்லை. அவர் எமது முன்னாள் தலைவர். எவ்வாறாயினும் குத்தகைக்கு வழங்கப்பட்ட நாட்டின் எந்தவொரு வளங்களும் திரும்பப் பெறப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.





பிரிமா நிறுவனம் 20 வருட குத்தகைக்கே வழங்கப்பட்டது. எனினும் அதனை இன்று வரை மீளப்பெற்றுகொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.





அதற்குப் பதிலளிக்கும் வகையில் குறிப்பிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி வேண்டுமாக இருந்தால் நாளையே அந்த துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டு, மீளப் பெற்றுகொள்ள முடியும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் 70 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதால் அந்த காலப்பகுதி முடிவதற்கு முன்பே துறைமுகத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அதற்கான நட்டஈட்டை செலுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.