மன்னாரிலுள்ள சோதனைச் சாவடியை உடன் அகற்றவும்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" மன்னார் நுழைவாயிலில் உள்ள சோதனைச்சாவடியால் அரச சேவையாளர்கள் முதல் சாதாரண மக்கள்வரை அனைவரும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றேன்."





இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" மன்னார் நுழைவாயிலில் இருக்கின்ற சோதனைச்சாவடியால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மன்னாருக்குள் வருபவர்களும், வெளியே செல்பவர்களும் இறக்கி, ஏற்றப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றனர். இதனால் அரச பணியாளர்கள் முதல் சாதாரண மக்கள்வரை அனைவரும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.





அத்துடன், நீர்க்கொழும்பு மற்றும் பேலியகொடைக்கு வருகின்ற மீன் லொறிகள்கூட முழுமையாக சோதனையிடப்படுகின்றன. இதனால் உரிய நேரத்துக்கு செல்லமுடியாத நிலைமை உள்ளது. இது தொடர்பில் கேட்டால், போதைபொருள் கடத்தப்படக்கூடும், அதனால்தான் சோதனை எனக்கூறப்படுகின்றது.





மன்னாரை சுற்றி கடல்தான் உள்ளது. எனவே, கடற்படைக்கு தெரியால் அங்கு எவ்வாறு போதைப்பொருள் வரமுடியும்? வடக்கில் உள்ள போதைப்பொருளை கட்டுப்படுத்தவும், வியாபாரிகளை ஒடுக்கவும் தனியான புலனாய்வு பிரிவொன்றை அமைத்து நடவடிக்கை எடுக்கவும். மாறாக சோதனைச்சாவடி அமைத்து கெடுபிடிகளை அதிகரிப்பது மக்களுக்கே பாதிப்பாக அமையும். போதைப்பொருள் வியாபாரிகள் சுதந்திரமாக செயற்பட்டுவருகின்றனர். எனவே, மன்னார் நுழைவாயிலில் உள்ள சோதனைச்சாவடியை அகற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்."  -என்றார்.