இவ்வருடத்துக்குள் மாகாண தேர்தல்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner

மாகாணசபைகளுக்கான தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.





இதற்காக மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டமூலம் விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளதெனவும், அதற்கு எதிரணிகளும் முழு ஆதரவை வழங்குமென்றும் அறியமுடிகின்றது.





2019 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு, பொதுத்தேர்தலின்போது மக்கள் பேராதரவை வழங்கினர். மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணையையும் வழங்கினர்.





எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆட்சி மாற்றம் குறித்து எதிரணிகளும் கருத்துகளை முன்வைத்துவருகின்றன.





இவ்வாறானதொரு பின்புலத்தில் உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.





இலங்கையில் 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளென மொத்தம் 341 உள்ளாட்சி சபைகள் இருக்கின்றன. இவற்றில் எல்பிட்டிய பிரதேசசபைதவிர ஏனைய சபைகளுக்கு 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.





இவ்வாறு உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.





எனினும், பதவி காலம் நீடிப்பை அரசு நியாயப்படுத்தியுள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி ஆட்சியே நிலவியது.





அக்கட்சியினருக்கு தேவையானவர்களே ஆளுநர்களாக இருந்தனர். இதனால் உள்ளாட்சி சபைகளால் இரு வருடங்கள் முறையாக இயங்கமுடியவில்லை. அதன் பின்னர் கிடைத்த இரு வருடங்களில் கொரோனா தொற்று.





எனவே, உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது - அவர்கள் இயங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரச தரப்பு வழங்கும் மேலதிக விளக்கமாகவும் உள்ளது.
ஆனால், உண்மை அதுவல்ல, தேர்தலை நடத்தினால் படுதோல்வி ஏற்படும், அரசின் செல்வாக்கு சரியும், கோட்டாமீதான நம்பிக்கை சிதையும் என்பதாலேயே - பதவி காலம் நீடிப்பு என்ற போர்வையில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துவருவதால், காத்திரமான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட பின்னர், மாகாணசபைத் தேர்தலுக்கு சென்று, மக்கள் மனநிலையை அறிவதே அரசின் திட்டமாக உள்ளது.





அந்த முடிவுகளை அடிப்படையாக வைத்தே அரசின் அடுத்தக்கட்ட நகர்வுகள் அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.