போராடாதீர் !

Politics 2 ஆண்டுகள் முன்

banner

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் நடத்திய தம் நில மீட்புக்கான அறப்போராட்டத்தை அவ்வளவு இலகுவில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். யாராவது மறந்திருப்பின், இந்த முன்கதை சுருக்கத்தைத் தருகிறேன். 2009 ஆண்டில் இறுதிப்போர் வலயம் முள்ளிவாய்க்காலை நெருங்கும் வரையில் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு கிராமங்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை. அந்தக் கிராமங்களின் மக்கள் முதன்முறையாக அப்போதுதான் இடம்பெயர்ந்தார்கள். தம் வளமான வயல்களையும், தோட்டக்காணிகளையும், தென்னந்தோட்டங்களையும், வீடு வளவுகளையும் விட்டு வெளியேறினர். அவர்கள் கிராமத்தைவிட்டு வெளியேறி நான்கு மாதங்களுக்குள் போர் முடிவுக்கு வந்தது. ஆறு மாதங்களுக்குள் போர் நடந்த பகுதிகளுக்கான மீள்குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கேப்பாப்புலவுக்கு விடுவிப்பு நிகழவில்லை. பிலக்குடியிருப்பு, கேப்பாப்புலவு கிராமங்களை தன் தேவைகளுக்கு எடுத்துக்கொண்ட இராணுவம், அந்தக் கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு, நந்திக்கடல் ஓரமாக, “கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தை” உருவாக்கிக்கொடுத்தது. அதில் குடியேற மக்கள் ஆரம்பத்தில் மறுத்தபோதும், அங்கு போய் இருந்துகொண்டு தம் சொந்த கிராமத்துக்குப் போகலாம் என்ற நம்பிக்கையில் 2011 ஆண்டில் மீள்குடியேறினர். 





ஆயினும், மீள்குடியேறி இரண்டு வருடங்கள் கடந்தபோதும், தம் சொந்த கிராமங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூப்பிடுதொலைவில் தம் தென்னந்தோட்டங்களை வைத்துக்கொண்டு, பாதித் தேங்காய்க்கு வழியின்றி வாழ்ந்தனர். கலாசார சீரழிவுகளும், கல்வி கற்காத பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எனவேதான் 2013 ஆம் ஆண்டிலிருந்தே தம் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர்  கேப்பாப்புலவு கிராம மக்கள். அக்காலப் பகுதியில் நிலவிய கோராமான ஆட்சி, மக்களின் போராட்டத்தை அடக்கியது. மக்கள் வாழும் இடம் இராணுவ கேந்திர மையத்திற்கு அடுத்த வேலியாக அமைந்தமையால், போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொருவரினது சாத்திரக் குறிப்பையுமே இராணுவம் கையில் வைத்திருந்தது. ஆயினும் போராடினார்கள். வீதிகளில் இறங்கிப் போராட முடியாத தருணங்களில், ஆலயங்களில் கூடிப் போராடினர். வயதான முதியவர் ஒருவர் ஆலய வாசலிலேயே சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோரின், கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பான வாக்குறுதிகளையடுத்து அவர் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்.





2017 ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதி வரை இதுவேதான் நிலைமையாக இருந்தது. மக்கள் திரண்டு நிலம் கேட்டுப் போராடுவது, இராணுவம் மிரட்டுவது, வீடுவீடாகச் சென்று அச்சுறுத்துவது, போராட்டக்காரர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது, இதனால் மனமுடைந்து கலைந்துபோவதுமாகத்தான் கேப்பாப்புலவு நிலமீட்டுப் போராட்டத்தின் பயணம் இருந்தது. இதனையெல்லாம் தெளிவாக அவதானித்து, “நிலத்துக்குத் திரும்பினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்” என்ற உறுதியோடு களத்தில் குதித்தது ஒரு போராட்ட அணி. அந்த அணிக்குத்தான் சதீஸ் கௌசல்யா என்கிற 37 வயதுப் பெண் தலைமையேற்றார். இதுவரையான போராட்டகாலத்தில் ஆண்கள் இலக்குவைக்கப்பட்டனர். எனவே இம்முறை தொடங்கப்பட்ட போராட்டத்தில் பெண்களும், சிறுவர்களும் களமிறங்கினர். இதுவரையான போராட்டகாலத்தில் போராடுவதெற்கென்று ஒரு நாளை, ஒரு நேரத்தை ஒதுக்கினார்கள். ஆனால் இம்முறை அந்தத் திட்டத்தையே தூக்கியெறிந்தார்கள். நேர, காலம் என எதையும் வரையறைப்படுத்தாது, இராணுவ முகாமுக்கு நடுவில் ஒரு வீதியோரத்தைப்பிடித்து, கிடைத்த பொருட்களால் குடில் அமைத்து, அங்கேயே தங்கியிருந்து இரவுபகலாகப் போராடினர்.





2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் தொடக்கப்பகுதயில்தான் இப்போராட்டம் ஆரம்பித்தது. மாசிப் பனி மூசிப்பெய்யும் பொழுதுகளில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் என போராட்டக்காரர்கள் அனைவரும் வீதியிலும், வயல் வரம்பிலும் இரவிரவாகப் படுத்துக்கிடந்தனர். காய்ச்சலும், தடிமனும் வாட்டியது. பசி வாட்டியது. இராணுவம் புகைப்படம் எடுத்து வெருட்டியது. நேரில் இறங்கிவந்து மிரட்டியது. யாருமே அவ்விடத்தை விட்டு அகலவில்லை. இவ்வளவு காணிகளையும் விடுவித்தாலே இடத்தை விட்டு நகருவோம் என வரைபடம் வரைந்துவிட்டுக் குந்தியிருந்தனர். போராட்டத் தலைவியான கௌசல்யா போராட்டத்துக்குள் எவ்விதப் பிளவுகளும் ஏற்படாதவாறு கவனித்துக்கொண்டார். தான் மட்டுமின்றி தன் பிள்ளைகளையும் கூட போராட்ட களத்திலேயே வைத்திருந்தார். பாடசாலை சிறுவர்களாக இருந்த அப்பிள்ளைகள், பாடசாலை சீருடையுடனேயே நிலம் கேட்டுப் போராடினர். போராட்டப் பாடலிசைத்தனர். இந்தக் கொள்கை உறுதிக்கு உலகமெலாமிருந்தும் தமிழர் ஆதரவு பெருகியது. சமநேரத்தில் கண்டனங்களும் எழுந்தன. வேறுவழியேயின்றி இராணுவம் கேப்பாப்புலவின் பிலக்குடியிருப்புப் பகுதியை விட்டு வெளியேறியது. போராட்டத் தலைவி கௌசல்யாவைத் தம் தோளில் சுமந்தபடி மக்கள் தம் சொந்த ஊர் திரும்பினர்.





ஊர் திரும்பியதும் மக்கள் அனைவருமே தத்தம் தொழில்களில் பரபரப்பாகினர். காணிகளைத் துப்பரவு செய்வது, வேலிகளை அமைப்பது, வயல்களை சீர்படுத்துவது, விதைப்பில் ஈடுபடுவது என ஆயிரம் சோழிகள் அவர்களுக்கு இருந்தது. அந்தப் பரபரப்புக்குள்தான் கௌசல்யாவுக்கு ஆரம்பித்தது பிரச்சினை. கௌசல்யாவும், அவரது குடும்பமும் தனியே இலக்குவைக்கப்பட்டனர். ஊர் திரும்பிய மக்கள் அனைவரும் வருமானத்திற்கு ஒரு தொழிலைத் தேட கௌசல்யாவும், தன் கிராமத்தில், வீதியோரமாக எரிபொருள் கடையொன்றை வைத்தார். கடை திறந்து ஓரிரு நாட்களுக்குள் கடையை அகற்றக்கோரிய துண்டுச் சீட்டுடன் அவரின் வாசலில் நின்றது பொலிஸ். தமது முகாம்கள் அதிகமிருக்கும் அந்தப் பகுதியில், போராட்டக்காரர்களாக கௌசல்யா குடும்பத்தினர் எரிபொருள் கடையை வைத்திருப்பதானது, தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயம்.  தமது வாகனங்கள் அவ்வீதியால் பயணிக்கும் வேலையில் பெற்றோல் குண்டுகளைத் தயாரித்துத் தம் மீது வீசித் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது எனப் புதுக்கதையை எழுதியது இராணுவம். இதற்கு நடவடிக்கை எடுத்தது பொலிஸ். கடை பூட்டப்பட்டது.





வெளிநாடொன்றிலிருந்து ஊர் திரும்பிய கௌசல்யாவின் கணவரான சதீஸ், குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். தான் வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய பணத்தில் கௌசல்யா போராட்டம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டையே பிரிதலுக்கான காரணமாக அவர் முன்வைத்தார். மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் போன்றவற்றுக்கு வெளியே செல்லாமல், வீட்டுக்குள்ளேயே தடுப்புக்காவலில் வைக்கப்படுபவர்கள் வரிசையில் கௌசல்யா முதலிடத்தில் இருக்கிறார். அந்தப் பகுதியில் எங்கு களவு நடந்தாலும், சமூக விரோத செயல்கள் இடம்பெற்றாலும் முதல் தேடுதலுக்குட்படுத்தப்படும் வீடாக கௌசல்யாவின் வீடு இருக்கிறது. தற்போது, அவரது மகன் (பாடசாலை சீருடையுடன் போராட்டம் நடத்தியவர்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புவைத்திருப்பதாகக் கோரிய விசாரணையொன்றையும் பொலிஸார் நடத்திவருகின்றனர். இந்ந அச்சுறுத்தல்களால் கெசல்யாவும், பிள்ளைகளும் தனித்துவிடப்பட்டிருக்கின்றனர். தோளில் சுமந்த ஊரவர்கள், நிரந்தரமாகவே கைவிட்டுள்ளனர். இதனால் கௌசல்யா தன் சொந்தக் கிராமத்தைவிட்டு வெளியேறி,  இராணுவம் அமைத்துக்கொடுத்த மாதிரிக் கிராமத்தின் தற்காலிக வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். “இவர்களோடு தொடர்பு வைத்தால் சிக்கல்“ என்ற மனநிலையோடுதான் இப்போது கௌசல்யாவின் குடும்பத்தை ஊர் நோக்குகிறது.  





ஜெரா