அரச எதிர்ப்பு அலையை இனக்கலவரமாக மாற்ற விஷமிகள் சதி!

banner

" இலங்கையில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையை இனக்கலவரமாக மாற்றுவதற்கு சில விஷமிகள் முற்படுகின்றனர். எனவே, வன்முறையில் ஈடுபடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்தையும் கையில் எடுக்க முற்படக்கூடாது. பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்."





இவ்வாறு சர்வமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது, ஆளுங்கட்சியின் கொலைவெறித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இலங்கையில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு வழிவகுத்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.





இலங்கையில் ஏற்பட்ட மோதல்களினால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அரசியல்வாதிகளின் மற்றும் அவர்களின் சகாக்களின் 103 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வாகனம் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.





இலங்கையில் கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் நேற்றிரவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அம்மோதலை இனக்கலவரமாக மாற்றுவதற்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் முயற்சித்துள்ளனர். ‘சிங்களவர்களை, முஸ்லிம்கள்’ தாக்குகின்றனர் என பிரச்சாரம் முன்னெடுத்தனர். இதனால் பதற்ற நிலைமை உருவானது. கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.





இந்நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையை இனக்கலவரமாக மாற்றுவதற்கு சில விஷமிகள் முற்படுவதாகவும், இதன்பின்னணியில் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





எனவே ,மக்கள் வன்முறைகளில் ஈடுபடாமல், சட்டத்தை கையில் எடுக்காமல் செயற்பட வேண்டும் என அரசியல்வாதிகள், ஆன்மீக தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.