ஓயாத விலை உயர்வால் திண்டாடும் பெருந்தோட்ட மக்கள்

banner

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மலையக பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.





அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றத்தால், 'வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு' எனும் பொறிக்குள் சிக்கி, மீண்டெழ வழியின்றி அம்மக்கள் திண்டாடுகின்றனர்.





மலையக பெருந் தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் பெரும்பாலானவர்கள், பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நாட் சம்பளமாக நிபந்தனை அடிப்படையில் ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளதால் வழங்கப்படும் சம்பளமானது, அவர்களின் உணவு தேவையைக்கூட பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என மலையக சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கோதுமைமாவின் விலை நான்கு தடவைகள் அதிகரிக்கப்பட்டுவிட்டன. இதர உணவுப் பொருட்களும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் வீட்டிலுள்ள பொருட்களை விற்றும், அடகு வைத்தும், கடன் வாங்கியுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது என மக்கள் தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.





பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள், விவசாயத்தையும் உப தொழிலாக செய்துவருகின்றனர். உரத்தட்டுப்பாட்டால் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். இதனால் விவசாயம் ஊடான வருமானமும் தடைபட்டுள்ளது.





பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்து கொழும்புக்கு தொழிலுக்குச்சென்றவர்களும், உணவு தட்டுப்பாடு, தொழில் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தமது ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். இவர்களை கவனிக்க வேண்டிய நிலையும், தோட்டத் தொழிலை நம்பியிருக்க வேண்டியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் குடும்ப வன்முறைகளும் வெடித்துள்ளன.





எரிபொருள் தட்டுப்பாட்டால் ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறுகிய தூரத்துக்குகூட அதிக கட்டணம் அறவிடப்படுவதால், மக்கள் பொதுபோக்குவரத்தையே அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.





இவ்வாறு எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள தமது பகுதிகளுக்கே இந்தியா நிவாரணத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்