13 முழுமையாக அமுலாக வேண்டும் -ரெலோ வலியுறுத்து

banner

“ நாடாளுமன்ற முறைமையிலேயே தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அதேபோன்று நிறைவேற்று அதிகார முறைமையினாலேயே ஸ்ரீ எழுத்து நீக்கப்பட்டது. எனவே, நிறைவேற்று அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்லவர்களிடமிருந்தால் சில வேளைகளில் எமது மக்களுக்கு நன்மையாக இருக்கலாம்.





ஆனால், கோட்டாபய போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான அதிகாரம் இருப்பதனாலேயே நாங்கள் இன்று அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.”





– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.





எமது மக்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்காது 21ஆவது திருத்தத்தை ஆதரிக்கவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.





அவர் மேலும் தெரிவிக்கையில்,





" பிரதமராக ரணில் பதவியேற்று 2 மாதங்களாகிவிட்ட போதும் நாட்டில் எந்தவிதமான மாற்றமுமில்லை. பொருளாதார நெருக்கடி கூடிக்கெண்டே செல்கின்றது. சில வேளைகளில் அனைத்துக் கட்சிகளின் கூட்டு அரசு ஏற்பட்டிருந்தால் சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் உதவி செய்திருப்பார்கள். தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்த ஒருவர் பிரதமராகப் பதவியேற்ற காரணத்தால் சஜித் பிரேமதாஸவினது அணி அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை.





ஜே.வி.பி. ஆதரவு கொடுக்கவில்லை. இதர கட்சிகளும், ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூடுதலான உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு கொடுக்காத நிலையில், இன்று சர்வதேசத்தின் ஒரு நம்பிக்கையான பிரதமராக அவர் இருப்பார் என்று நினைத்துக்கெண்டிருந்தாலும் கூட சர்வதேசம் அவரரை நம்பி இந்த நாட்டுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை.





கோட்டபாய ராஜபக்சவை நம்பி சர்வதேசம் ஒருபோதும் உதவி செய்வதாக இல்லை. நாட்டின் அரசில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போதிருக்கின்ற நிலைமையை விட மோசமாகச் செல்லும் என்பதுதான் தற்போது வெளிப்படையாக இருக்கின்றது.





அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கதைகள் இருக்கின்றன. இந்த 21ஆவது அரசமைப்புத் திருத்தத்தினால் எமது மக்களுக்கு வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு எட்டு திருத்தங்களுக்கு முன்பு வந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக்கொண்டு வரப்பட்ட சட்டமூலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதனூடாக இந்த அரசு அரசியலமைப்பை மீறுகின்றதாகவே கருதப்படுகின்றது.





21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு சாராருக்கு இருக்கின்றது. இந்த 21ஆவது திருத்தச் சட்ட வரைபிலும் அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருப்பதாகக் கூடக் கூறியிருக்கின்றார்கள். ஆனால், இந்த 21ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைக் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயக முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகின்றது.





இவ்வாறான நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கும்போதுதான் பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் இந்த நாடாளுமன்ற ஜனநாயக முறைமையிலே கிழித்தெறியப்பட்ட வரலாறுகளே இருக்கின்றன.





நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறை 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினாலேயே முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த ஸ்ரீ பிரச்சினை இரவோடு இரவாக நாடாளுமன்றத்துக்குச் சட்டமூலம் கொண்டு வரப்படாமல் நிறைவேற்று அதிகார முறையால் இல்லாமலாக்கப்பட்ட வரலாறும் உண்டு.





எனவே, நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்வர்களின் கைகளில் இருந்தால் சில வேளைகளில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம். ஆனால், கோட்டபய ராஜபக்ச போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற காரணத்தினாலேதான் நாங்கள் இன்று அந்த அதிகார முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். இந்த நிலைப்பாட்டினால் எமது மக்களுக்கு என்ன பயன் என்பதையும் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும்.





21ஆவது திருத்தச் சட்டத்துக்குத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் 13ஆவது திருத்தச் சட்டத்துக்குள் இருக்கும் அதிகரங்களை முழுமையாகப் பரவலாக்க வேண்டும் என்ற திருத்தம் 21ஆவது திருத்தச் சட்டத்துக்குள்ளே உள்வாங்கப்பட வேண்டும். அதற்கும் மேலாக நிதி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்கின்ற சரத்துக்கள் கூட 21ஆவது திருத்தச் சட்டத்துக்குள் வரவேண்டும். " - என்றார்.