'முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்'

banner

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் , எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கோரிக்கை விடுத்தார்.





அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பானது சிறுபிள்ளைத்தனமானது.





இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பலதரப்பினரும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன, சாதாரண மக்கள்வரிசையில் நிற்கும் பரிதாபத்தை
உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.





அதிலும், பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வைகழிக்கும் அவலநிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது, அமைச்சர் பந்துல
இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க முடியாத கருத்தாகவே உள்ளது.





இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.





இன்று, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், எரிபொருளை கோரி ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்கவேண்டும். களவு செய்பவர்களுக்கும்
பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்கிறது.





அவர்களின் பின் செல்லாத புலனாய்வாளர்கள், புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர் என்றார்.