கரும்புலி தினத்தன்று இலங்கையில் குண்டு தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்

banner

கரும்புலி நினைவேந்தலை முன்னிட்டு - அதனை இலக்கு வைத்து ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பினார்.





2022 ஜூன் 27 ஆம் திகதியன்று, பொலிஸ்மா அதிபரால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அநுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டார்.





" வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின்றின் தலையீட்டுடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்டது என காரணங்களை காண்பிக்கும் வகையிலேயே அவை முன்னெடுக்கப்படவிருக்கின்றன.





எனவே, யாழ்ப்பாணம் பகுதியில் தற்போது கடமையாற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பொது வைபவங்களில் பங்கேற்க ​வேண்டாமென குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.





எவ்வாறு இந்த தகவல் கிடைக்கப்பெற்றதா, இவ்வாறு சம்பவமொன்று இடம்பெறவுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கான ஓர் நகர்வா இது என்ற சந்தேகம் எழக்கூடும் எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.