பதவி துறந்நார் பிரிட்டிஷ் பிரதமர்!

Politics 1 வருடம் முன்

banner

பிரிட்டிஷ் பழமவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொறிஸ் ஜோன்சன் இன்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் அவர் தனது பிரதமர் பதவியைத் துறக்கிறார். கட்சியின் புதிய தலைவரே அடுத்த பிரதமராக வரவிருக்கிறார்.





அவர் யார் என்பதை பழமைவாதிகள் எதிர்வரும் வாரங்களில் முடிவு செய்வர். புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டு அவர் பிரதமராகப் பொறுப்பேற்கும் வரை - எதிர்வரும் இலையுதிர் காலம் வரை- பொறிஸ் ஜோன்சன் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார்.





நம்பர் 10, டவுணிங் வீதி அலுவலகம் முன்பாக இன்று மதியம் தனது பதவி விலகலை நாட்டுக்கு அறிவித்த ஜோன்சன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக அங்கு உரையாற்றினார்.





"உலகின் மிகச் சிறந்த தொழிலைக் கைவிடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆயினும் இவை எல்லாமே இடைவேளைகள்தான்" - என்று அங்கு அவர் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க அவரது பதவி விலகல் உரையைக் கேட்பதற்காககப் பெரும் எண்ணிக்கையானோர் டவுணிங் வீதி அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்தனர். ஜோன்சன் உரையாற்றிய வேளை அருகே சற்றுத் தள்ளி நின்றிருந்தவர்களில்





அவரது துணைவி கேரியும் (Carrie) ஒருவராவார். அவர் தனது ஆண் குழந்தையைக் கையில் வைத்திருந்தார். ஜோன்சன் தனது மனைவிக்கும், குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் உரையில் நன்றி தெரிவித்தார்.





பிரெக்ஸிட் தீர்மானத்தை முழுதாகநிறைவேற்றி முடித்தமை, பெரும் தொற்று நோய்க்குள் இருந்து நாட்டைப் பாதுகாப்பாக வெளியேற்றியமை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக மேற்கு நாடுகளை வழிநடத்தியமை என்று





ஜோன்சன் தனது பதவிக்காலச் சாதனைகள் பலவற்றை உரையில் நினைவு படுத்தினார்.
பிரதமர் தனது பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்னராக சில பொறுப்புகளுக்கு அமைச்சர்களைநியமனம் செய்தார்.





2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தவர் ஜோன்சன். ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளில் அவரது தலைமைத்துவப் பலவீனம் கட்சிக்குளே பல முறைகேடுகளுக்கு வழிசமைத்தது. அவை பெரும் ஊழல் விவகாரங்களாக உருவெடுத்தன. இறுதியில் அவரது பதவிக்கே ஆப்பு வைத்துவிட்டன.





அவரது கட்சியில் பொறுப்புகளை வகித்த அமைச்சர்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அவரை எதிர்த்துக்கொண்டு தங்கள் பதவிகளைத் துறந்து பெரும் அணியாக வெளியேறியதை அடுத்தே பதவி விலக வேண்டிய கட்டாயம் ஜோன்சனுக்கு ஏற்பட்டது.





தாஸ்நியுஸ்