சீன உளவு கப்பல் குறித்து கூட்டமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு

banner

"சீனாவின் உளவு பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருவதை இலங்கை அரசும் ஜனாதிபதியும் உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.





இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-





"இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் ஓர் இராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசு செயற்படவில்லை.





வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.





இந்திய மீனவர்களின் வருகை என்பது கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது. அண்மையில் சீனாவினுடைய தூதுவர் வடக்கு வந்து ஒரு சர்ச்சையைக் கிளப்பிச் சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.





ஆகவே, இலங்கை அரசு இராஜாதந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவைப் பகைக்கக்கூடாது என்பது எமது கருத்தாகும்.
பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கைக்குப் பல உதவிகளை இந்தியா அண்மைக்காலமாக செய்து வருகின்றது.
எமது தமிழர்களைப் பொருத்தமட்டில் இந்தியாதான் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய நாடாகவும், எங்களுக்குக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக நாடாகவும் இருக்கின்றது.





இந்தநிலையில், சீனாவின் வேவு பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையெனில் இந்தியா இலங்கையை விட்டு அதிக தூரம் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.





இந்தியாவைப் பகைப்பதால் இலங்கைக்கு ஒருபோதும் நன்மை கிடைக்காது. அதைத் தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியாது" - என்றார்.