பீரிஸின் பதவியை பறிக்க முடிவு!

banner

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை எடுப்பதற்காக மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று விரைவில் இடம்பெறவுள்ளதென கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.





ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்திருந்தது. கட்சி செயலாளரால் இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.





எனினும், கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கினார். அவரின் பெயரையும் வழிமொழிந்தார். தற்போது டலஸ் அணியில் முக்கிய நபராக திகழ்கின்றார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 பேர் கொண்ட எம்.பிக்கள் குழுவொன்று டலஸ் அழகப்பெரும தலைமையில், சுயாதீனமாக செயற்பட்டுவருகின்றது .





இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பீரிஸிடமிருந்து தவிசாளர் பதவியை பறிக்குமாறு, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், டலஸ் அணியில் செயற்படும் உறுப்பினர்களிடமிருந்து மொட்டு கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியும் பறிக்கப்படவுள்ளது.