ரணிலின் அழைப்பை நிராகரித்து காட்டமான கடிதத்தை அனுப்பிய அநுர!

banner

" ரணில், ராஜபக்ச ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே சர்வக்கட்சி அரசு அமைக்கப்படுகின்றது. இந்த அரசில் நாம் இணையமாட்டோம். எனவே, 6 மாத காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்."





இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.





சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் பேச்சு நடத்த வருமாறு தேசிய மக்கள் சக்திக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த அழைப்பை ஏற்று பேச்சுக்கு செல்வதற்கு ஜே.வி.பி. மறுப்பு தெரிவித்தது.





இந்நிலையில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.





தமது கட்சி ஏன் சர்வக்கட்சி அரசை ஏற்கவில்லை என்பதை குறித்த கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ள அநுர குமார திஸாநாயக்க, ஆட்சியை நீடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும் குறிப்பிட்டார்.





" சர்வக்கட்சி அரசை, இடைக்கால அரசாகக் கருதி அந்த அரசை 06 மாதங்களுக்கு குறுகிய காலத்திற்கு மட்டுப்படுத்தி பின்னர் பொதுத்தேர்தலை நடாத்தி புதிய ஆணையுடன் மக்கள் விரும்பிய அரசை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். ஆனால் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெளிவான திட்டம் இல்லை." - எனவும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.