தமிழர்களையும் , தமிழ்க் கூட்டமைப்பையும் பிளவுபடுத்த சகுனி ஆட்டம்!

Politics 1 வருடம் முன்

banner

" சர்வக்கட்சி அரசு என்ற வலையில் கண்ணை மூடிக்கொண்டு சிக்குவதற்கு நாம் தயாரில்லை. எனவே, அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் மாத்திரமே சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கப்படும்."





இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்தார்.





ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று 3 ஆவது நாளாகவும் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வினோ எம்.பி. இவ்வாறு கூறினார்.





" மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் 13 பிளஸ் எனக் கூறப்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சியின்போதும், அரசியல் தீர்வு திட்டம் குறித்து பல சுற்று பேச்சுகளை நடத்தியிருந்தோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் எம்மை கூட்டாக ஏமாற்றினர்.
எனவே, கண்ணைமூடிக்கொண்டு சர்வக்கட்சி அரசை ஆதரிப்பதற்கு நாம் தயாரில்லை.





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.அந்த எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது. தமிழ் மக்களிடமிருந்து எம்மை அந்நியப்படுத்தும் சகுனி ஆட்டம் இனியும் எடுபடாது, அவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டாலும் ஏமாற நாம் தயாரில்லை.





தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்." - எனவும் வினோநோதராதலிங்கம் குறிப்பிட்டார்.





அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் 2000 நாட்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பிலும் அவர் சபையின் கவனத்தை ஈர்த்தார்.