போருக்காக நாட்டை அணிதிரட்டும் அறைகூவலை விடுத்தார் புடின்!

Politics 1 வருடம் முன்

banner
அதிபர் விளாடிமிர் புடின் ஆற்றியுள்ள தொலைக்காட்சி உரை ஒன்றில் நாட்டைப் போருக்காகப் பகுதி அளவில் அணி திரட்டும் (“partial mobilisation”) அறைகூவலை விடுத்துள்ளார். கட்டாயப் போர்ப் பயிற்சி பெற்ற சுமார் 25 மில்லியன் ரஷ்யர்களில் சுமார் மூன்று லட்சம் பேரை உடனடியாகக் களமிறக்குகின்ற அறிவிப்பை மொஸ்கோ விடுத்திருக்கிறது.

முன் கூட்டியே ஒளிப்பதிவு செய்து வெளியிடப்பட்டது எனக் கூறப்படும் அந்த உரையில், "மேற்குக் கூட்டணிக்கு எதிரான அணி திரள்வு" உடனடியாக இன்றைய தினமே (புதன்) நடைமுறைக்கு வருகின்றது என்று புடின் தெரிவித்திருக்கிறார்.

மேற்கு நாடுகளது கூட்டணியின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களைப் பாவிப்பதற்கும் தயங்க மாட்டாது என்ற ஒர் எச்சரிக்கையையும் புடின் தனது உரையில் மறைமுகமாக வெளியிட்டிருக்கிறார்.

மேற்கு நாடுகள் "அணு ஆயுத அச்சுறுத்தலில்" ஈடுபட்டு வருவதாகவும், மாஸ்கோவிடம் "பதிலளிக்க நிறைய ஆயுதங்கள்" இருப்பதாகவும் அவர் கூறினார்.

"எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ​​ரஷ்யாவையும் நமது மக்களையும் பாதுகாக்க நாங்கள் நிச்சயமாக எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். அது எமது முட்டாள்தனம் அல்ல," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புடினின் இந்தக் கூற்று அணுவாயுத மோதல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களைத் தூண்டியுள்ளது.

ரஷ்யாவில் இவ்வாறு ஒரு போர் அணிதிரள்வு (mobilisation) அழைப்பு விடுக்கப்படுவது இரண்டாம் உலகப் போரின் பின்னர் இதுவே முதல் தடவையாகும். புடினின் அறிவிப்பு அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நியூயோர்க்கில் நடைபெறுகின்ற ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்திலும் அது எதிரொலித்திருக்கிறது. ஆனால் போர்க் களத்தில் அது எந்தவிதமான பெரும் கள நிலை மாற்றங்களையும் உடனடியாக ஏற்படுத்தாது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.


உக்ரைனில் சமீப நாட்களாக ரஷ்யா களத்தில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்ற பின்னணியில் போரைத் தீவிரப்படுத்தும் விதமான புதிய போர்ப் பிரகடன அறிவிப்பைப் புடின் வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யப்படைகள் வசம் இருந்த முக்கிய நகரங்கள் மீது உக்ரைன் துருப்புக்கள் கடும் எதிர்த்தக்குதல்களை நடத்தி அவர்களைப் புறமுதுகிடச் செய்துள்ளதால் அந்தத் தோல்வியை - பின்னடைவை-மறைப்பதற்காகவே புடின் இந்த அறிவிப்பைவிடுத்துள்ளார் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

புடினின் இன்றைய உரையை அடுத்து அவர் மீது இயன்றளவு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு அதிபர் மக்ரோன் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு சீனாவும் இந்தியாவும் கேட்டிருப்பதை அவர் வரவேற்றுள்ளார்.

அதிபர் மக்ரோன் நியோர்க்கில் தங்கியுள்ளார். அவர் இன்று பின்னராக ஜோ பைடனைச் சந்தித்து பிந்திய நிலவரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.


ThasNews-Paris