italyPoliticsWorld

உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் தீவிர வலதுசாரிகள் ஆட்சி

இத்தாலியில் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாகத் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் வென்றிருக்கிறது. நியோ-பாசிசவாதப் பின்னணி கொண்ட இத்தாலிய சகோதரர்கள்(Brothers of Italy) கட்சியின் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களுக்கு முன்னேறியிருப்பதைமுற்கொண்டு வெளியாகிய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இத்தாலிய சகோதரர்கள் கட்சி 26% வீத வாக்குகளைப் பெற்று முதனிலைக்கு வந்துள்ளது. அதன் தலைவியும் தீவிர வலதுசாரியுமாகிய ஜோர்ஜியா மெலோனி புதிய பிரதமராக-நாட்டின் முதலாவது பெண் பிரதமராகப்-பதவியேற்பார் என்று அறிவிக்கப்படுகிறது.

45 வயதான ஜோர்ஜியா மெலோனி ரோம் புறநகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். முசோலினி ஆதரவாளர்களின் இத்தாலிய சமூக இயக்கத்தின் (Italian Social Movement) மாணவர் பிரிவில் தனது 15 ஆவது வயதில் இணைந்து அரசியலில் பிரவேசித்தவர். சர்வாதிகாரி முசோலினிக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்ற முதலாவது தீவிர தேசியவாதியாக அவர் இடம்பிடிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாகவும் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகின்ற இத்தாலி

நாட்டில் ஐரோப்பிய எதிர்ப்புக் கொள்கை கொண்ட மெலோனியின் வெற்றி ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய அரசியலில் அவரது தாக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற தீவிர எதிர்பார்ப்பு அயல் நாடுகளில் காணப்படுகிறது.

தனது 19 ஆவது வயதில் பிரான்ஸின் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கையில்,மெலோனி இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் (Benito Mussolini) புகழ்ந்து கருத்து வெளியிட்டிருந்தார். “முசோலினி ஒரு சிறந்த அரசியல்வாதி,இத்தாலி நாட்டுக்காக அவர் செய்தவை எல்லாம் நன்மைகளே” என்று கூறியிருந்தார்.

முசோலினி காலத்தின் கோஷங்களாகிய “கடவுள்-தந்தை நாடு மற்றும் குடும்பம்” (God, fatherland and family”) என்பவற்றையே தனது சுலோகமாகப் பயன்படுத்துகிறார்.

ஜோர்ஜியா மெலோனி குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர். இத்தாலிக்கு தினமும் வந்து குவிகின்றஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்காகநாட்டின் கடல் எல்லையை அவர் இறுக்கி மூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அவரோடு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஏனைய இரண்டு வலதுசாரிக் கட்சிகளும் ஐரோப்பிய வெறுப்புவாதம் கொண்டவை. அதனால் மெலோனியின் தலைமையில் இத்தாலி இனிமேல் ஐரோப்பிய ஐக்கியத்தைக் கட்டிக்காக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மத்தியோ சல்வினியின் (Matteo Salvini) லீக் கட்சி, சில்வியோ புறுல்ஸ்கோனியின்(Silvio Berlusconi) மைய வலது சாரி Forza Italia கட்சி ஆகிய இரு அணிகளும் மெலோனியின் இத்தாலிய சகோதரர்கள் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

ஜோர்ஜியா மெலோனியின் ரஷ்யா மற்றும் ஐரோப்பா தொடர்பான கொள்கைகளில் அண்மையில் மாற்றங்கள் வெளிப்பட்டன. உக்ரைனை ஆதரிக்கும் மேற்குலகின் பக்கம் சார்ந்து கருத்துக்களை அவர் வெளியிட்டுவந்தார். ஐரோப்பிய வெறுப்புவாதக் கொள்கையிலும் தளர்வுப் போக்குக் காணப்பட்டது.

எனினும் சுவீடனைத் தொடர்ந்து இத்தாலியிலும் தீவிர வலதுசாரிகளது கை ஓங்கி இருப்பது ஐரோப்பா எங்கும்இயங்கும் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளுக்குப் புது உற்சாகத்தைக்கொடுத்திருக்கிறது. பிரான்ஸின் மரின் லூ பென், எரிக் செமூர் போன்ற தீவிர தேசியவாதத் தலைவர்கள் மெலோனியின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றிருக்கின்றனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

Related Articles

Back to top button