பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பானமையை பெறாத வேட்பாளர்கள்!

Politics 1 வருடம் முன்

banner
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் எவரும் பெரும்பான்மை பெறாத நிலையில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜயிர் பொல்சொனாரோ மற்றும் இடதுசாரியான லுலா டி சில்வா இடையில் இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் லுௗலா 48 வீதமான வாக்குகளையும் பொல்சொனாரோ 43 வீதமான வாக்குகளையும் வென்றுள்ளனர். இது கருத்துக்கணிப்புகளை விடவும் நெருக்கமான போட்டியாக இருந்தது.

இதன்படி இரண்டாம் சுற்றுக்கு செல்லாமல் இருப்பதற்கு தேவையான 50 வீத வாக்குகளை பெற லுௗலா தவறியுள்ளார்.

இந்நிலையில் பிரேசிலின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பதற்கு வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை அனுபவித்ததால் 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல்போன லுௗலா, இந்தத் தேர்தலில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார்.

எனினும் கருத்துக் கணிப்புகளில் லுௗலாவை விடவும் பின்தங்கியிருந்த பொல்சொனாரோ அவைகளை பொய்யாக்கி எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்குகளை வென்றுள்ளார்.

பல ஆண்டுகளாக கடும் போட்டியாளர்களாக இருந்து வரும் இந்த இருவரும் தேர்தல் பிரசாரங்களில் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அதிகம் செய்தனர்.

தேர்தலுக்கு முன்னர் கடைசியாக நடந்த தொலைக்காட்சி விவாதத்திலும் ஜனாதிபதி பொல்சொனாரோ, லுௗலாவை திருடன் என்று அழைத்தார். லுௗலா ஊழல் குற்றச்சாட்டில் 580 நாட்கள் சிறை அனுபவித்ததை குறிப்பிட்டே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். எனினும் லுௗலா மீதாக குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறுபுறம் பொல்சொனாரோவை பைத்தியக்காரர் என்று லுௗலா அழைத்தார்.