'ஜெனிவா இராஜதந்திரச் சமர்' - இலங்கையின் தலைவிதி இன்று நிர்ணயம்!

Politics 1 வருடம் முன்

banner
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை நிராகரித்துள்ளது.

எனினும், வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக 10 இற்கும் குறைவான வாக்குகளே கிடைக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் எனவும், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நடுநிலை வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெனிவாப் பிரேரணை நிறைவேறும் பட்சத்தில் பெரும்பாலும் 51/1 தீர்மானம் என்ற பெயரில் அழைக்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் பட்சத்தில் அதுகுறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக பேச்சு முன்னெடுக்கப்பட்டு, அவசியமான ஒத்துழைப்புக்கள் இலங்கைக்கு வழங்கப்படும்.

அதன்தொடர்ச்சியாக அத்தீர்மானம் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை எதிர்வரும் 2023 ஜுன் மாதமும், ஆரம்பகட்ட எழுத்துமூல அறிக்கை 2023 செப்டெம்பர் மாதமும், 2 ஆம் கட்ட வாய்மொழிமூல அறிக்கை 2024 மார்ச் மாதமும், முழுமையான இறுதி அறிக்கை 2024 செப்டெம்பர் மாதமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.