ஜெனிவா சமரில் தோல்வி ஏற்படுவது ஏன்? சஜித் வெளியிட்ட பகீர் தகவல்!

banner
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தேவையான சந்தர்ப்ப சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுக்கின்றது. அதாவது தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதத்தை அரசாங்ககே வழங்குகின்றது."


இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


" போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வசந்த முதலிகே உட்பட மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரவுவேளைகளில் மல்வானை, கடவத்தை, கம்பஹா போன்ற பகுதிகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே அழைத்துச்செல்லப்படுகன்றார், இதற்கான காரணம் என்ன?


அவரை படுகொலை செய்வதற்கான திட்டம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது, தப்பிச்செல்ல முற்பட்டார், அதனால் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்படலாம்.


இந்நாட்டில் வீதியில் இறங்கி போராடுவதற்கான சுதந்திரம் இல்லையா, அமைதியாக அரசியல் போராட்டங்களில் ஈடுபட இடமில்லையா, அப்படியானால் குற்றப்பத்திரிகைக்கூட தாக்கல் செய்யாமல் எதற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்?


ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இப்படியான சூழ்நிலை ஏற்புடையதா, இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தேவையான வேட்டுகளை, ஆயுத்தங்களை அரசாங்கமே வழங்கிவருகின்றது. ஜெனிவாவில் நாட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறுவதை நாம் ஏற்கவில்லை. ஆனால் அரசாங்கம்தான் இதுவிடயத்தில் சேம் சைட் கோல் அடித்துவருகின்றது.


பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனக் கூறப்பகின்றது, ஆனால் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பு இடம்பெறுகின்றது, இதுதான் அரசாங்க பயங்கரவாதம். நாம் வன்முறையை ஏற்பதில்லை. ஆனால் ஜனநாயக மற்றும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை எதிர்க்கின்றோம். கைதாகியுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்." - என்றார்.