ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே உள்ள சீன ஆராய்ச்சி கப்பல் எனக் கருதப்படும் உளவு கப்பல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்துகளை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் பாதையை குறித்த கப்பல் உளவு பார்க்கக்கூடும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரட்டை நோக்கக் கப்பலான டான் சுவோ யி ஹாவோ, ஆஸ்திரேலியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே, ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையோரம் மேற்கு நோக்கி பயணிப்பதற்கு முன்பு நியூசிலாந்து விஞ்ஞானிகளுடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
குறித்த கப்பல் சர்வதேச சட்டத்தை மீறவில்லை என பிரதமர் அந்தோனீ அல்பானீஸி நேற்று தெரிவித்திருந்தார். எனினும், கப்பலின் நகர்வுகள் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பு கழுகுபார்வையை செலுத்திவருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த பதிலானது தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவரது பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன கப்பல் கண்காணிக்கப்படுகின்றதா என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.