சீனா தளமாகக்கொண்ட நிறுவனத்துக்குரிய டார்வின் துறைமுக குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் இரு பிரதான கட்சிகளையும் சீனா எச்சரித்துள்ளது.
தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் மேற்படி நிறுவனத்துடனான 99 வருடகால குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என லேபர் மற்றும் லிபரல் கூட்டணி உறுதியளித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் இந்த உறுதிமொழியை சீனா வன்மையாகக் கண்டித்துள்ளது.
பீஜிங் மற்றும் கன்பராவுக்கிடையிலான உறவு சீராகிவரும் சூழ்நிலையில், இந்த குத்தகை ஒப்பந்த இரத்து விவகாரமானது இரு நாட்டு உறவை மீண்டும் சீர்குலைக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களின் வணிக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய தரப்பினரை நாம் வலியுறுத்துகின்றோம். மேலும் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தை மிகைப்படுத்துவதையும், சாதாரண வணிக ஒத்துழைப்பை அரசியலாக்குவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் சீன வலியுறுத்தியுள்ளது.
2015 லிபரல் கட்சி ஆட்சியின்போதே டார்வின் துறைமுகம் சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. எனினும், இது தவறான முடிவு என்பதை தற்போதைய லிபரல் கட்சி தலைவர் பீட்டர் டட்டன் ஒப்புகொண்டுள்ளார்.