MCG தாக்குதல் திட்டம்: பயங்கரவாதிக்கு கண்காணிப்பு உத்தரவு நீடிப்பு!
குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதி அப்துல் நாசர் பென்ப்ரிகா, சமூக பாதுகாப்புக்கு இன்னும் ஆபத்தானவர் என விக்டோரியா உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜேம்ஸ் எலியட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டாட்சி அரசின் சட்டமா அதிபர் அலுவலகத்தால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான விசாரணையின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பயங்கரவாதி அப்துல் நாசர் மேலும் ஏழு மாதங்களுக்கு கண்காணிப்பில் இருப்பார்.
எம்.சீ.ஜி தாக்குதல் திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் பென்ப்ரிகா, 2005 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்புக்கமைய மேற்பார்வை காலம் நவம்பர் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த கால எல்லை மேலும் நீடிக்கப்பட வேண்டுமா என்பதற்குரிய காரணங்களை முன்வைப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 60 வயதாகும் அப்துல் நாசர் பென்ப்ரிகாவுக்கு 2005 ஆம் ஆண்டில் 15 வருடகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு தண்டனை காலம் முடிவடைந்தாலும் மேலும் 3 வருடங்களுக்கு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அவர் 30 இற்கு மேற்பட்ட கடுமையான நிபந்தனைகளுடன் அரச மேற்பார்வை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளார்.