தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும்கூட கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் அங்கமாக தலைவர்கள் விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் பங்கேற்றுள்ளார்.
ஸ்கை நியூஸின் ஏற்பாட்டிலேயே குறித்த விவாதம் நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் லேபர் கட்சியின் தலைவர் பிரதமர் அந்தோனி அல்பானீஸி , லிபரல் கூட்டணியின் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விவாதத்துக்குரிய நேரம் நெருங்கியவேளை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனின் தந்தையான புரூஸ் டட்டனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விவாதத்தில் இருந்து விலகுவது யோசிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டது எனவும், தனது சகோதரர்கள் தந்தையுடன் இருந்ததால் விவாதத்தில் பங்கேற்றதாகவும் எதிர்க்கட்சி தலைவர் இன்று கூறினார்.
80 வயதான தனது தந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை நேற்றிரவு நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது வாழ்க்கைச் செலவு, எரிபொருள், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
விவாதத்தில் 100 பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் 44 பேர் அல்பானீஸே விவாதத்தில் வெற்றிபெற்றவர் எனவும், 35 பேர் பீட்டர் டட்டனே வெற்றியாளர் எனவும் அறிவித்தனர். 21 பேர் தமது முடிவுகளை வெளிப்படுத்தவில்லை.
கூட்டாட்சி தேர்தலுக்கான 2 ஆம் கட்ட தலைவர்கள் விவாதம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.