சிங்கப்பூர் பாடசாலையில் தீ விபத்து: ஆஸி. சிறுமி பலி: மேலும் 19 பேர் காயம்!
சிங்கப்பூரிலுள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 10 வயது சிறுமி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் ஆஸ்திரேலியாவில் எப்பகுதியை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு சமையல் முகாம்களை நடத்தும் பாடசாலையொன்றிலேயே நேற்று முன்தினம் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 15 சிறார்கள் உட்பட 20 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பிறகு 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஆஸ்திரேலிய சிறுமியின் குடும்பத்தாருக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.