எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனை இலக்கு வைத்து பயங்கரவாத சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமானது ஆஸ்திரேலிய அரசியல் வாதிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதை பிரதமர் அந்தோனி அல்பானீஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் உறுதிப்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பில் 16 வயது மாணவரொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரிஸ்பேனில் உள்ள தனியார் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், பிரிஸ்பேனில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் வீடுமீது ட்ரோன் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களால் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார் என விசாரணைகளை முன்னெடுத்துவரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், வெடிபொருட்களை தயாரிப்பதற்குரிய பயிற்சியில் குறித்த மாணவர் ஈடுபட்டுள்ளார் எனவும், இதற்குரிய இரசாயனங்களை கொள்வனவு செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த மே முதல் ஜுலை மாதம்வரை இத்தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மாணவர் கைது செய்யப்படும்வரை தாக்குதல் திட்டம் பற்றி எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாது எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை தாக்குதலை நடத்த திட்டமிட்ட மாணவன், பிரிஸ்பேன் சிறார் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவர் சார்பில் பிணை கோரப்படவில்லை.
இது தொடர்பான வழக்கு குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பான குற்றத்துக்காக அதிகட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மே 03 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குரிய பிரச்சாரம் தற்போது நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.