ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் ஆஸ்திரேலியாவால் அமெரிக்காவிடமிருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பெறமுடியுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு கொள்கைகளாலேயே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் சீனா காலூன்ற தயாராகும் நிலையில் தமது கடற்படை பலத்தை விஸ்தரிப்பதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டது. இதற்கமைய மூன்று அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
எனினும், புதிய வரிகளால் கப்பல்களின் விலை சடுதியாக உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள செலவீனங்களால் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு செலவு 0.3 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அமெரிக்க கடற்படைக்குரிய வளங்களை மேம்படுத்துவதற்கு ட்ரம்ப் கவனம் செலுத்தும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வழங்கினால் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான தமது தடுப்பு தன்மை சக்தி குறையக்கூடும் என வாஷிங்டன் கருதக்கூடும்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் திட்டம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.