ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு விசா வழங்குமாறு வலியுறுத்தி சிட்னியில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் ஏதிலிகள் கழகமே இதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தது.
அகதிகள் செயற்பாட்டாளர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள், ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இப்பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குரிய பிரச்சார நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது. அகதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் கிறீன்ஸ் கட்சி உள்ளது.
எனவே, லேபர் மற்றும் லிபரல் கூட்டணி என்பன அகதிகள் தொடர்பில் சாதகமான உறுதிமொழிகளை வழங்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளதாகவும், அது தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் பேரணியில் பங்கேற்றிருந்தவர்கள் வலியுறுத்தினர்.